திருச்சி, டிச.31: திருச்சியில் ஜன.2ம் தேதியன்று நடைபெற இருக்கும் மதிமுக கட்சி பொதுச்செயலாளர் வைகோ-வின் சமத்துவ நடை பயணம் துவக்க விழா நிகழ்ச்சிக்கான விழா மேடை உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகளை திருச்சி எம்பி துரை வைகோ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் திருச்சி உழவர் சந்தையில் இருந்து நாளை (ஜன.2) காலை 10 மணியளவில் சமத்துவ நடைபயணத்தை துவங்கவுள்ளார். இந்த நடைபயணம் திருச்சி உழவர் சந்தையில் ஜன.2 அன்று துவங்கி மதுரையில் ஜன.12ம் தேதி நிறைவடையவுள்ளது. இந்நடை பயணத்தின் நோக்கம், போதை பொருள்கள் மற்றும் மதுபானம் உள்ளிட்ட பொருள்களை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் சாதி கொடுமைகளற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறுகிறது. சமத்துவ நடை பயண துவக்க விழா நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு நடை பயணத்தை துவக்கி வைக்கின்றார். இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம் காதர் மொய்தீன் வாழ்த்துரை வழங்கவுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்த நடை பயணத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு, மனவை தமிழ் மாணிக்கம், டாக்டர் ரொகையா உள்ளிட்ட திருச்சி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
