ரூ.63,000 பண மோசடி வழக்கில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு 7 நாள் சிறை குடந்தை நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம், ஜன.1: தஞ்சையை சேர்ந்த கருணாகரன் என்பவரின் மகளுக்கு தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க சீட் வாங்கி தருவதாக, கும்பகோணத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் குருமூர்த்தி ரூ.63 ஆயிரம் வாங்கினார். ஆனால் குருமூர்த்தி கூறியவாறு கருணாகரனின் மகளுக்கு சீட் வாங்கி தரவில்லை.

இது குறித்து பல்கலை.யில் படிப்பதற்காக மகளை சேர்த்து விடுவதாக கூறி ரூ.63 ஆயிரம் வாங்கி ஏமாற்றியதாக குருமூர்த்தி மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் கருணாகரன் புகார் செய்தார். அதன்பேரில் குருமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கும்பகோணம் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நேற்றுமுன் தினம் நடைபெற்றது.

அப்போது, வழக்கை விசாரித்து மோசடியில் ஈடுபட்ட குருமூர்த்திக்கு 7 நாட்கள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே குருமூர்த்தி 10 நாட்கள் சிறையில் இருந்து விட்டதால், இப்போது சிறை தண்டனை அனுபவிக்க தேவையில்லை. ரூ.30 ஆயிரம் அபராதத்தை மட்டும் கட்ட வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் 7 நாட்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். குருமூர்த்தி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: