6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தேர்தல் அலுவலர் நேரில் பார்வை

புதுக்கோட்டை, ஜன.1: ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. பணியை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தேர்தல் அலுவலர், கலெக்டர் அருணா நேரில் பார்வயிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை, மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் அருணா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்; நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் Ballot Unit 5,126 எண்ணிக்கையிலும், Control Unit 2,380 , VVPAT 2,460 எண்ணிக்கையிலும் ஆக மொத்தம் 9,966 எண்ணிக்கையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, பெங்களூர் பெல் நிறுவனத்தின் 9 பொறியாளர்கள் முதல் நிலை சோதனை பணிகளை இன்றையதினம் காலை 9 மணி முதல் மாலை 7மணி வரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதல் நிலை சோதனை பணிகள் நடைபெற்று வருவதை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அருணா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து,கந்தர்வக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில், 178-கந்தர்வக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி, கந்தர்வக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட வாக்காளர்கள், முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தின் போது தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர் விவரங்கள் பொருந்தாததாலோ அல்லது தவறாகப் பொருந்த வாய்ப்புள்ளதாலோ, இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயரை தக்கவைத்து கொள்வதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அசல் ஆவணங்களின் கணக்கீட்டு படிவத்தை, இணையதளம் வழியாக சமர்ப்பிக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, தனி தாசில்தார் (தேர்தல்) செந்தமிழ்குமார், கந்தர்வக்கோட்டை தாசில்தார் ரமேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: