ஒரு ஆண்டில் 12 வழக்குகள் பதிவு; ரூ.16.62 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

விருதுநகர், ஜன.1: விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், லஞ்சம் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்து, ரூ.16,62,500 தொகையை கைப்பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டு அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், கூட்டுறவு சார்பதிவாளர், மின் வாரிய உதவி பொறியாளர், பேரூராட்சி இளநிலை பொறியாளர் என அரசு மற்றும் பொதுத்துறை அலுவலர்கள் உட்பட மொத்தம் 8 பேர் லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1,03,500 லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டும், வீடுகளில் சோதனையில் ஈடுபட்டபோது கைப்பற்றப்பட்ட ரூ.8 லட்சம் தொகை லஞ்சப் பணமாக இருக்கலாம் என நீதிமன்றத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழாண்டில் மட்டும் பொதுத்துறை, அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம், வேலையை செய்து தர லஞ்சப்பணம் பெறுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் மூன்று அரசு அலுவலகங்களில், மாவட்ட துணை ஆய்வுகுழு அலுவலர் தலைமையில் திடீர் சோதனை செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து லஞ்சப் பணம் என சந்தேகிக்கப்பட்ட மொத்தம் ரூ.7,59,000 தொகை கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் துணை ஆட்சியர், பொறுப்பு சார்பதிவாளர் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் ஆகியோர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல் அரசு அலுவலர்கள் செய்த முறைகேடுகள் மற்றும் அரசு அலுவலர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தது தொடர்பாக பொதுமக்கள் அளித்த ரகசிய தகவலின் பேரில், ரகசிய அறிக்கைகள் அனுப்பப்பட்டு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர், நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர், கிராம ஊராட்சி செயலர் ஆகியோர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் 12 வழக்குகளில் அரசு அலுவலர்கள் மற்றும் தனிநபர்கள் என 55 நபர்கள் மீது சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள்) நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு வழக்குகளில் அரசு அலுவலர்கள் மற்றும் தனி நபர்கள் ஏழு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்து தண்டனை வழங்கியுள்ளது.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டுகளில் 37 வழக்குகளில் அரசு அலுவலர்கள் மற்றும் தனிநபர்கள் என 93 பேர் மீது ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட 12 வழக்குகளில் அரசு அலுவலர்கள், தனிநபர்கள் என 24 பேர் குற்றவாளிகள் என அறிவித்து நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.

எனவே பொதுமக்கள் அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. அரசு அலுவலர்கள், பொதுமக்களிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஏஜென்டுகள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தொலைபேசி தொடர்பு எண்கள்: 04562-252678, 04562-252155, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கைபேசி எண் 94981-05882, இன்ஸ்பெக்டர்கள் 94981 -06118 மற்றும் 83000-36678 எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் பெயர் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: