சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி, ஜன.22: சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி காவல்துறை சார்பில் மன்னார்குடியில் நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பெண்கள் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனர். மன்னார்குடி காவல் உட்கோட்டத்தின் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நேற்று நடைபெற்றது. மன்னார்குடி தேரடி பகுதியில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி பெரியார் சிலை அருகே முடிவடைந்தது. பேரணியில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் தலைக்கவசம் அணிந்து கலந்துகொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த டிஎஸ்பி இளஞ்செழியன் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேசுகையில், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். பெற்றோர்கள் பள்ளி க்கு செல்லும் தங்களின் குழந்தைகளுக்கு இருசக்கர வாகனத்தை தனியாக ஓட்டி செல்ல அனுமதிக்க கூடாது. நான்கு சக்கரவாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். மேலும் மோட்டார் வாகன வழக்குகளை துரிதப்படுத்துவதன் மூலமும், மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின் பேரில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலமும் மன்னார்குடி காவல் உட்கோட்டத்தில் வாகன விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் மூலமாக ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார். முன்னதாக போக்குவரத்து எஸ்ஐ வைத்தியநாதன் வரவேற்றார். டவுன் எஸ்ஐ முருகன் நன்றி கூறினார்.

Related Stories:

>