ஓசூர், டிச.30: ஓசூர் பண்டாஞ்சநேயர் கோயில் அருகே, சர்வீஸ் சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், அவ்வழியாக நடந்து மற்றும் டூவீலரில் செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஓசூரில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, சர்வீஸ் சாலை பிரசித்தி பெற்ற பண்டாஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். இந்த சர்வீஸ் சாலையில், கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் டூவீலரில் செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு அவ்வழியாக நடந்து செல்பவர்கள் மீது, வேகமாக வரும் வாகனங்களால் கழிவுநீர் ஆடைகள் மீது தெறிக்கிறது. எனவே, சர்வீஸ் சாலையில் கழிவுநீர் தேங்காதபடி, கால்வாயை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
