ஓசூர், டிச.25: நூறு நாள் வேலை திட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜ அரசு, அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து, ஓசூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 100 நாள் வேலை திட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, மாநில அரசுக்கு நிதியையும் குறைத்து, இந்த திட்டத்தை ஒழிக்கும் விதமாக சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் மேயர் சத்யா, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதில் துணை மேயர் ஆனந்தய்யா, செந்தில்குமார், நீலகண்டன், ராமச்சந்திரன், வனவேந்தன், ரவிக்குமார், தனலட்சுமி, இந்திராணி, மாதையன், ராஜா, ராமு, வெங்கடேஷ், கஜேந்திரமூர்த்தி, ராமமூர்த்தி, லோகேஷ் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக, கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, ஒன்றிய அரசு மற்றும் அதிமுகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
