ஏழாயிரம்பண்ணை, டிச.27: சாத்தூர் மேல காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ்(36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மனைவி நாகலட்சுமி(45) என்பவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் பணம் வட்டிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல மாதங்களாக வட்டி மற்றும் அசலை நாகலட்சுமி சுப்புராஜூக்கு திருப்பி தராததாக கூறப்படுகிறது. தனது வங்கி கணக்கில் பணம் இருப்பதாக கூறி செக்கை சுப்புராஜூக்கு கொடுத்துள்ளார். அதில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது. இது குறித்து சுப்புராஜ் சாத்தூர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
நேற்று சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி வரதராஜன், செக் மோசடியில் ஈடுபட்ட நாகலட்சுமிக்கு ஐந்து மாதம் சிறை தண்டனை மற்றும் ஒரு மாதத்திற்குள் வட்டியுடன் பணத்தை திருப்பி தர வேண்டும் என உத்தரவிட்டார். இல்லையெனில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
