சென்னை: கிறிஸ்துமஸ் தினத்திற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில், உலகெங்கும் அன்பு தவழவும், அமைதி நிலவவும், சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமணி (பாமக): ஒட்டுமொத்த உலகமும் அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
வைகோ (மதிமுக): வெறுப்பவர்களையும் நேசிக்கச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் அமுதமொழியை மனதில் கொண்டு இந்தியாவின் மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதி கொள்வோம்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன் (தமாகா): இயேசு கிறிஸ்துவின் வழியில் வாழும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, இன்புற்று, வளமுடன், நலமுடன் வாழ நல்வாழ்த்துகள்.
இயேசு அழைக்கிறார் தலைவர் பால் தினகரன்: நோயில் இருந்தவர்கள் இயேசுவால் குணமாக்கப்பட்டார்கள். மரண இருளில் இருந்தவர்களுக்கு பெரிய வெளிச்சம் உதித்தது. பாக்கியங்களை தரவே இயேசு இன்றும் கிறிஸ்துமஸ் நாளிலே நமக்கும் தோன்றுகிறார். அதே பாக்கியங்களை நீங்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது இந்த வருடம் பெற்றுக்கொள்ளும்படி மனதார வாழ்த்துகிறேன்.
இதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், வேல்முருகன் (தவாக), சரத்குமார் (பாஜ), நாகூர் ராஜா (இந்திய தேசிய லீக்), வி.ஜி.சந்தோசம், எர்ணாவூர் நாராயணன் (சமக), விஜய் வசந்த் (காங்கிரஸ்), புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு யாதவ சபை தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
