×

செயற்கை முறையில் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க திட்டம்: இயற்கையை விட 30 சதவீதம் கூடுதல் சேமிப்பு,நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.6.74 கோடியில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் நிரப்புதல் திட்டம் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு மழை பொழிந்தாலும் நிலத்தடி நீர் வற்றி குடிநீருக்கும் விவசாயத்திற்கும் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேராகும். இதில் பாதி அளவிற்கு, ஏறக்குறைய 65 லட்சம் ஹெக்டேர்களில் விவசாயம் நடக்கிறது.

அதில், பாதி மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. மீதமுள்ள ஹெக்டேர்கள் இதர பாசன விவசாயம் நடக்கிறது. பாசனத்திற்கு வேண்டிய நீர் மூன்று வகைகளில் கிடைக்கப்பெறுகிறது. அதாவது, ஆற்றுப்பாசனம், குளத்து பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய 3 வகைகளில் கிடைக்கப்பெறுகிறது. இந்த மூன்றும் சம பங்கு பரப்பு நிலங்களுக்கு நீர் வழங்குகின்றன. இப்படியாக கிணற்றுப் பாசனம் மொத்தம் 12 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம் வழங்குகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை மீட்டெடுக்கவும், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பாதுகாக்கவும், நீர்வளத்துறை பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படாத அளவிற்கு செயற்கை நிலத்தடி நீர் திட்டம் மூலம் வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் விரிவாக்க செயல்படுத்தப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜனவரி மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் செயற்கையாக நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக அதிகளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக 576 செயற்கை மறுபூர்த்தி குழாய் கிணறுகள் ஒரே கட்டமாக அமைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை மாநில நிலம் மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் நேரடியாக செயல்படுத்துகிறது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், கரூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மாவட்டங்களில் விவசாயம், தொழில்துறை மற்றும் குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதால், பல பகுதிகள் மிகை பயன்பாடு மற்றும் அபாய நிலை பிரிவுகளுக்குள் தள்ளப்பட்டுள்ளன. இதேபோல், நீர் தரம் பாதிக்கப்பட்டு, உப்பு மற்றும் இரும்புச் சத்து அதிகரித்துள்ள திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களிலும் செயற்கை மறுபூர்த்தி அமைப்புகள் நிறுவப்படுகின்றன.

சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர் பிரச்னை தீவிரமாக இருப்பதால், அடுத்தகட்டமாக அந்த பகுதிகளும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.6.74 கோடியில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஜனவரியில் பணிகள் தொடங்கி நான்கு மாதங்களில் பெரும்பாலான பகுதிகளில் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கை திட்ட குழாய்க் கிணறுகள் 10 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை ஆழமாக தோண்டப்பட்டு, மழைநீர் மற்றும் மேற்பரப்பு ஓட்டத்தை நேரடியாக ஆழ்ந்த நீரடுக்கு பகுதிகளுக்குள் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர் இயற்கையாக சேகரிக்கும் முறையை விட சுமார் 30 சதவீதம் கூடுதல் நீர் நிலத்தடியில் சேமிக்கப்படும். இத்திட்டத்தின் இடத்தேர்வில் அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

பாறை அமைப்பு, கடந்த பல ஆண்டுகளாக பதிவான நிலத்தடி நீர் மட்ட சரிவு, நீர் தரக் குறைபாடு போன்ற அம்சங்களை கொண்டு புவியியல் நிபுணர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில், ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள், செக் டேம்கள் போன்ற நீர் சேமிப்பு மற்றும் நீரோட்ட அமைப்புகளுக்கு அருகே இந்த குழாய்க் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தேங்கும் நீர் வீணாக கடலில் கலக்காமல், நேரடியாக நிலத்தடிக்கு ஊடுருவி நீர்மட்டத்தை உயர்த்தும்.

தேசிய நிலத்தடி நீர் வளங்களின் இயக்க மதிப்பீடு அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் தாலுகா அளவில் மதிப்பீடு செய்யப்பட்ட 313 பகுதிகளில் 32.91 சதவீதம் மிகை பயன்பாட்டில் உள்ள பகுதிகளாகவும், 7.35 சதவீதம் கடுமையான அபாய நிலையில் உள்ள பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், சேலம், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் மிகையாக நிலத்தடி நீர் பயன்படுத்தப்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தமிழ்நாட்டின் மொத்த நிலத்தடி நீர் மறுபூர்த்தி அளவானது கடந்த 2024ல் 21.51 பில்லியன் கன மீட்டராக இருந்த நிலையில், 2025ல் 22.61 பில்லியன் கன மீட்டராக உயர்ந்துள்ளது. அதேபோல், நிலத்தடி நீர் எடுப்பின் விகிதமும் 74.26 சதவீதத்திலிருந்து 73.50 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சிறிய முன்னேற்றத்தை நீடித்து, நீண்டகால பலனாக மாற்றுவதற்காகவே இப்போது இந்த பெரிய அளவிலான செயற்கை நிரப்புதல் திட்டம் தொடங்கப்படுகிறது.

இந்த 576 அமைப்புகளில் சுமார் 100 குழாய்க் கிணறுகள் நிலத்தடி நீர் கண்காணிப்பு கிணறுகளாகவும் செயல்படும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் ஏற்கனவே உள்ள சுமார் 4,300 கண்காணிப்பு கிணறுகளுடன் இணைந்து, நீர்மட்ட மாற்றங்கள், நீர் தர மேம்பாடு போன்றவை மாதந்தோறும் மற்றும் ஆண்டுதோறும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.

செயற்கை அமைப்புகள் அமைக்கப்பட்ட பின், 500 மீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு வரை நிலத்தடி நீர்மட்டம் உயரும். அடுத்த சில ஆண்டுகளில் பல பகுதிகள் மிகை பயன்பாடு, அபாய நிலையிலிருந்து பாதியளவிற்கு பாதுகாப்பு மற்றும் ‘பாதுகாப்பான’ பிரிவுகளுக்கு நகரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* 30 சதவீதம் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க திட்டம்
மழைநீர் நேரடியாக ஆழ்ந்த நீரடுக்கு பகுதிக்கு செல்லும் வகையில் செயற்கை குழாய் கிணறுகள் 10 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை ஆழமாக தோண்டப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் இயற்கையாக சேகரிக்கும் முறையை விட சுமார் 30 சதவீதம் கூடுதல் நீர் நிலத்தடியில் சேகரமாகும்.

* அதிக அபாயகரமான மாவட்டங்கள்
நிலத்தடி நீர் அதிகளவில் பயன்படுத்தப்படும் திருப்பத்தூர், வேலூர், கரூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முதற்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான குழாய்க் கிணறுகள் அமைக்க திட்டம்.

* கடந்தாண்டை விட நிலத்தடி நீர் அதிகரிப்பு
2024ம் ஆண்டு – 21.51 பில்லியன் கன மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்ட அளவானது 2025ம் ஆண்டு – 22.61 பில்லியன் கனமீட்டராக அதிகரிப்பு. அதேபோல், நிலத்தடி நீர் எடுப்பின் விகிதமும் 74.26 சதவீதத்திலிருந்து 73.50 சதவீதமாக குறைந்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு