×

அரக்கோணம்-புளியமங்கலம் இடையே ரூ.97 கோடியில் புதிதாக 3வது, 4வது ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது: ஆங்காங்கே ரயிலை நிறுத்தும் நிலைக்கு முற்றுப்புள்ளி

சென்னை: சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் புறநகர் ரயில்களும் விரைவு ரயில்களும் திருவாலங்காடு – அரக்கோணம் இடையே அடிக்கடி நின்று நேரத்தை வீணாக்குகின்றன. இதை தவிர்க்க தெற்கு ரயில்வே சென்னை பிரிவு அரக்கோணம் ரயில் யார்டில் பெரிய அளவில் சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள முக்கிய பணிகளாக புலியமங்கலம் – அரக்கோணம் இடையே மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகள் புதிதாக அமைப்பது ஆகும்.

இதில் ரயில் நிலையம் அருகே உள்ள 100 ஆண்டு பழமையான சப்வேக்களை மறுசீரமைக்க உள்ளது. இந்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியுள்ளன. மொத்தம் ரூ.97 கோடி செலவில் செய்யப்படுகிறது. புளியமங்கலம் – அரக்கோணம் 2 கி.மீ தூரத்தில் இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன. அதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, காட்பாடி செல்லும் விரைவு ரயில்களும், புறநகர் ரயில்களும் ஒரே பாதையை பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.

இதனால் ரயில்கள் 10 முதல் 30 நிமிடங்கள் வரை நின்று காத்திருக்கின்றன. குறிப்பாக 2005-06ல் ஏற்பட்ட சிக்கலினால் தான் இந்த பாதையில் வெறும் 2 பாதைகள் மட்டுமே அமைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த பிறகு ரயில்கள் தண்டவாளம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

புறநகர் ரயில்கள் நேரடியாக பிளாட்பார்ம் 3, 4, 5க்கு செல்லும். காட்பாடி செல்லும் வந்தே பாரத் போன்ற விரைவு ரயில்கள் வேகமாக செல்லும். ஏற்கனவே உள்ள கூடுதல் பாதை பிளாட்பார்ம் ஒன்றுடன் இணைக்கப்படும். இதனால் 200க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்களும், 130க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் பயனடையும்.

Tags : Arakkonam-Puliyamangalam ,Angange ,Chennai ,Aragonam ,Thiruvalangadu ,Southern Railway ,Aragonam Railway Yard ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு