கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம்

தூத்துக்குடி, டிச. 25: தூத்துக்குடியில் கிறிஸ்துமசை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி மாநகரில் கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் வகையில் பிரேசில், கனடா,மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுவது போன்று அலங்கார ஊர்திகளில் பல்வேறு வடிவங்களில் உருவங்களை அமைத்து உற்சாக நடனமாடியபடி, அதிரடி இசைமுழக்க இளைஞர்கள் கொண்டாடுவது வழக்கம். தூத்துக்குடி மாநகரில் லயன் ஸ்டவுன், மரக்குடி, மட்டக்கடை, பாத்திமாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் கப்பல், கிறிஸ்மஸ் தாத்தா உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கண்ணை கவரும் வகையில் மின் விளக்குகள் எரியவிட்டு இன்னிசை ஒலிக்க இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் நடந்தது. இந்த வாகன அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பனிமய மாதா பேராலயம் வந்தடைந்தது. இதை பல்வேறு பகுதிகளில் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர். ஊர்திகள் ஊர்வலத்தை முன்னிட்டு எஸ்பி பொறுப்பு சிலம்பரசன், டவுன் ஏஎஸ்பி மதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: