கிறிஸ்துமஸ் பண்டிகை; வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை: கிறிஸ்தவர்கள் குவிந்தனர்

 

நாகை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் குவிந்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். கிறிஸ்து பிறப்பை நினைவுபடுத்தும் வகையில் குழந்தை ஏசுவின் பிறப்பின் காட்சிகள் அரங்கேற்றம் நடைபெறுவதை காண வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வருகை தருவர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாட இருப்பதால் வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு திருப்பலி நடைபெறும் பகுதிகளில் குடில்கள் அமைக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும் நடுத்திட்டு முதல் யாத்ரீகர்கள் செல்லும் பாதையில் ஒரு கிமீ தூரத்திற்கு மின்விளக்குகளால் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலயம் முன் 43 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை அதிபர் இருதயராஜ் புனிதம் செய்து நேற்று திறந்து வைத்தார். இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை (25ம் தேதி) காலை முதல் பேராலயம் கீழ் கோவில், மேல் கோவில், பழைய வேளாங்கண்ணி ஆலயம் ஆகிய இடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேளாங்கண்ணிக்கு இன்று காலை முதலே கிறிஸ்தவர்களின் வருகை அதிகரித்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி விழாக்கோலம் பூண்டுள்ளது. வேளாங்கண்ணியில் பக்தர்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த பூண்டி மாதா பேராலயம் உட்பட டெல்டாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு இன்று நள்ளிரவு நடக்கிறது.

Related Stories: