வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம்!

 

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 தேதிகளில் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது; இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27.12.2025 (5), 28.12.2025 (5) 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 ஐ உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோரவோ படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய / மாற்றுத் திறனாளி (PwDs) வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்கள் சீராக நடைபெறவும், இச்செயல் திட்டம் பயனுள்ளதாக அமல்படுத்தப்படவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: