மாம்பழ கேக்
தேவையானவை:
ஒரு பெரிய மாம்பழ விழுது – 1,
மைதா – 2 கப்,
சர்க்கரை – 1 கப்,
வெண்ணெய் – ½ கப்,
பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை,
பால் – சிறிதளவு,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சலித்துக் கொள்ளவும். பின் அதில் மாம்பழ விழுது, வெண்ணெய், சர்க்கரை சேர்த்து மெதுவாக கிளறவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்க்கவும். வாசனைக்கு சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கவும். குக்கரை 10 நிமிடம் முன்னதாக சூடுபடுத்தி, பின் அதில் மாவுக் கலவையை வைக்கவும். கலவையை மூடி அரை வெப்பநிலையில் 25 (அ) 30 நிமிடம் வைக்கவும். (கேஸ்கட், குக்கர் வெயிட் போட தேவையில்லை).
சீத்தாப்பழ கேக்
தேவையானவை:
சீத்தாப் பழத்தின் சதை – 1 கப்,
மைதா – 1 கப்,
சர்க்கரை – ½ கப்,
முட்டை – 1,
எண்ணெய் – ¾ கப்,
வெனிலா எசன்ஸ் – ½ ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா – ½ டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை,
காய்ச்சிய பால் – ¼ கப்,
டூட்டி ஃப்ரூட்டி – ¼ கப்,
பாதாம் – 3.
செய்முறை:
சீத்தாப்பழ சதை, சர்க்கரை, முட்டைச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும். அதில் வெனிலா எசன்ஸ், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, டூட்டி ஃப்ரூட்டிச் சேர்த்து நன்றாக கலந்து, பாலை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும். ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் தடவி, லேசாக மைதா மாவு தூவி, கலந்த மாவினை ஊற்றி, அதன் மேல் சிறிதளவு டூட்டி ஃப்ரூட்டி மற்றும் பாதாம் துண்டுகள் நறுக்கிச் சேர்க்கவும். அடுப்பில் அடி கனமான கடாயின் உள்ளே சிறிய தட்டு வைத்து மூடி ேபாட்டு அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும். பிறகு கேக் கலவை கிண்ணத்தை உள்ளே வைத்து மூடிப் போட்டு 30 நிமிடம் மிதமான தீயில் பேக் செய்யவும். ஒரு டூத்பிக் வைத்து குத்திப் பார்த்தால், கேக் வெந்துவிட்டதா என்று தெரியும். சூப்பரான சீத்தாப்பழ கலவையில் கேக் தயார்.
பன்னீர் திராட்சை கேக்
தேவையானவை:
தோல் நீக்கிய பன்னீர் திராட்சை கூழ் – 1½ கப்,
மைதா – 250 கிராம்,
வெண்ணெய் – 250 கிராம்,
சர்க்கரை பவுடர் – 50 கிராம்,
பேக்கிங் பவுடர் 1½ டீஸ்பூன்,
ஆப்ப சோடா – 1½ டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் சோடா, ஆப்ப சோடா மூன்றையும் சலிக்கவும். வெண்ணெயை கிரீம் போல் அடித்துக் கொள்ளவும். அடித்த வெண்ணெயில் சர்க்கரை பவுடரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அடித்துக் கொண்டே மைதாமாவுக் கலவையும் சேர்த்து கலக்கவும். கடைசியாக பன்னீர் திராட்சை கூழ் சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாக கலந்து தகர ட்ரேயில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயில் ¾ மணி நேரம் வேக வைக்கவும்.
கொய்யாப் பழ கேக்
தேவையானவை:
கொய்யாப் பழம் – 1 (கொட்டையை நீக்கி, பொடியாக நறுக்கியது), மைதா – 1 கப்,
சர்க்கரை – ¾ கப்,
முட்டை, பாதாம் – 10,
பட்டர் – 2 டேபிள் ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை.
செய்முறை:
பாதாமை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் முட்டை ஊற்றி அதில் சர்க்கரை, பட்டர், பேக்கிங் பவுடர், அரைத்த பாதாம் விழுது சேர்த்து நன்றாக அடித்த பின் மைதா சேர்த்து பீட்டரால் நன்கு அடிக்கவும். அதில் கொய்யாப் பழத்தை சேர்த்து ட்ரேயில் வெண்ணெய் சிறிது தடவி, கலவையை ஊற்றவும். ஓவனில் 5 நிமிடம் வைத்து, பின் அதில் பொடியாக நறுக்கிய முந்திரியை மேலே தூவி விட்டு பின் பேக் செய்யவும்.
வாழைப்பழ கேக்
தேவையானவை:
வாழைப்பழம் – 3,
ஜவ்வரிசி, பால் – தலா 2 கப்,
சர்க்கரை – ¾ கப்,
மிக்ஸட் ஃப்ரூட் ஜூஸ் – 5 கப்,
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
கேசரிப் பவுடர் – சிறிது,
செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி, உலர் திராட்சை எல்லாம் சேர்த்து – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
ஜவ்வரிசியை நெய்யில் வறுத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஜவ்வரிசியை போட்டு நன்றாக வெந்ததும், வாழைப்பழத்தை சேர்த்து, ஃப்ரூட் ஜூஸை சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் ஏலக்காய் தூள், கேசரிப் பவுடர் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியாக வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலே செர்ரி பழத்தை வைக்கவும். சுற்றிலும் டூட்டி ஃப்ரூட்டி, ஓரங்களில் உலர் திராட்சையை தூவவும். ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
மாதுளை கேக்
தேவையானவை:
மைதா – 1 கப்,
வெண்ணெய் – ¼ கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
மாதுளை முத்துக்கள் – 2 ஸ்பூன்,
மாதுளை ஜூஸ் – ¾ கப்,
பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்,
சமையல் சோடா – ½ ஸ்பூன்.
செய்முறை:
மைதா, உப்பு, பேக்கிங் சோடா, சமையல் ேசாடா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இரு முறை சலிக்கவும். ஒரு ட்ரேயில் ¼ ஸ்பூன் வெண்ணெய் பூசவும். மீதமுள்ள வெண்ணெயை உருக்கி, சலித்த மாவுடன் சேர்த்து, மாதுளை ஜூஸ் ஊற்றி, மரக்கரண்டியால் ஒரே பக்கமாக 5 நிமிடம் கிளறவும். உடனடியாக ட்ரேயில் ஊற்றி, மாதுளை முத்துக்களை சேர்க்கவும். மைக்ரோவேவ் ஓவனை ‘ப்ரீஹீட்’ செய்த பிறகு அதில் ட்ரேயை வைத்து 180 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சுரைக்காய் பால் கேக்
தேவையானவை:
சுரைக்காய் – 1 (தோல் சீவி துருவியது),
பால், மைதா – 1 கப்,
சர்க்கரை – 300 கிராம்,
நெய் – 250 கிராம்,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்,
முந்திரி, திராட்சை – 15 (நெய்யில் வறுத்தது),
தேவையான கலர் – ஒரு சிட்டிகை.
செய்முறை:
அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, ஒரு கப் தண்ணீர் விட்டு சர்க்கரை, பால் சேர்த்து நன்றாக கலக்கவும். பாகு பக்குவமாக வரும் போது மைதா சிறிது சிறிதாக தூவி, விடாமல் கிளறவும். நெய்யை அவ்வப்போது சிறிது சேர்த்துக் கிளறவும். துருவிய சுரைக்காயை மைதா மாவுடன் சேர்த்து சிறிது சிறிதாக தூவிக் கிளறவும். ஏலக்காய் தூள், கலர், மீதி நெய்யை சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி விடவும். வறுத்த முந்திரி, திராட்சையை மேலே தூவி சிறிது அழுத்தி, ஆறிய பின் துண்டுகள் போடவும்.
பீட்ரூட் கேக்
தேவையானவை:
சின்ன சைஸ் பீட்ரூட் – 1 (தோல் சீவி துருவியது),
வெள்ளை ரவை – 1 கப்,
பொடித்த சர்க்கரை – 1 கப்,
பால் – 1 கப்,
தயிர் – ½ கப்,
பேக்கிங் பவுடர் ½ டீஸ்பூன்,
பேக்கிங் சோடா – ¼ டீஸ்பூன்,
நெய் – 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
துருவிய பீட்ரூட்டை வெறும் வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆறவிடவும். தயிரை நன்றாக அடித்துக் கொள்ளவும். இதில் பீட்ரூட், பொடித்த சர்க்கரை, பால், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து, சிறிது நேரம் வைக்கவும். குக்கரில் கீழே ஒரு ஸ்டாண்டை வைத்து 5 நிமிடங்கள் சூடாக்கவும். பேக்கிங் டிரேயில் நெய் தடவி, பீட்ரூட் கலவையை ஊற்றி குக்கரில் வைத்து, கேஸ்கட், வெயிட் போடாமல் ¾ மணி நேரம் அடுப்பை மிதமான தீயில் வைத்து வெந்ததும் எடுக்கவும்.
