*வெள்ளக்காலங்களில் விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயம்
*பாதுகாப்பு கேள்விக்குறியால் பொதுமக்கள் எதிர்ப்பு
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் கீழ்பகுதி கரைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய மரக்கன்றுகளை நடப்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு பெய்த கனமழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ் பகுதி கரையோரங்களில் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்க சுமார் ரூ.5 கோடி மதிப்பில் தாமிரபரணி ஆற்றின் கரைகளை உயர்த்தும் பணிகள் நடைபெற்றன. இதற்காக குளங்களில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு கரைகளை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழைக்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் ஆங்காங்கே மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர்.
இதனிடையே கரைகளை உயர்த்தும் பணி நடைபெற்ற தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் புங்கை, வேம்பு, பூவரசம் உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை நடப்பட்டு வருகிறது. சுமார் 4 கி.மீ. தொலைவு வரை சுமார் 10 அடி இடைவெளி விட்டு இதுவரை 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, மழையினால் மண் சரிந்து ஆங்காங்கே கரைகளில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. இந்நிலையில் மரக்கன்றுகளை நடுவதால் கரைகளுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படும். அதாவது மரங்கள் வளர வளர அவற்றின் வேர்கள் ஆழமாகச் செல்லும்போது, கரையின் உள் கட்டமைப்பில் விரிசல்கள் அல்லது துளைகளை ஏற்படுத்தலாம். இது வெள்ளக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படும் நிலையை உருவாக்கும்.
மேலும் பலத்த காற்று அல்லது புயல் வீசும்போதும், மரங்கள் காற்றின் வேகத்திற்குத் தாளாமல் வேரோடு சாயும் நிலை உருவாகும். அவ்வாறு சாய்ந்தால் கரையை அப்படியே பெயர்த்துக் கொண்டு வந்துவிடும்.
இது கரையில் மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கி, அணையின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வழக்கறிஞர் சீனிவாசன் கூறுகையில் ‘‘நிரந்தர வெள்ள தடுப்பு பணியாக தாமிரபரணி ஆற்றின் கீழ் பகுதி கரைகளை உயர்த்தும்பணி ரூ.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றது.
இதற்காக குளங்களிலிருந்து மண் எடுத்து பணிகள் நடைபெற்ற போது மழைக் காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகளில் மண் சரிந்து விழும் என எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களது எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த மாதம் பெய்த சிறு மழைக்கே கரையோரங்களில் இருந்து மண் சரிந்து சாலைகளில் விழுந்தது.
ஏற்கனவே மண்ணரிப்பு ஏற்பட்ட இடங்களில் வேம்பு, புங்கை, பூவரசு உள்ளிட்ட மரங்களை நடும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி தாமிரபரணி ஆற்றின் கரையின் சாய்வு தளப் பகுதிகளில் புதிய மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகும். எனவே சமதள பகுதியில் புதிய மரக்கன்றுகளை நடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

