* பஸ்சுக்காக காத்திருப்போருக்கு சுவாச கோளாறு பிரச்னை
* இதுவரை வாகன ஓட்டிகள் 15 பேர் விபத்தில் சிக்கி காயம்
விகேபுரம் : பாபநாசம் பிரதான சாலையை தோண்டி 6 நாட்களாகியும் பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புழுதி பறப்பதால் பஸ் நிறுத்தங்களில் காத்திருப்போருக்கு சுவாசக்கோளாறு பிரச்னை ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக பணியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் பிரதான சாலை முக்கியத்துவம் வாய்ந்தது. பாபநாசம் கோயில், அகஸ்தியர் அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தினமும் பைக், ஆட்டோ, வேன், லாரி, பஸ்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்கின்றன.
இருந்தபோதும் இந்த சாலையில் பல்வேறு பகுதிகளில் முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, விகேபுரத்தில் இருந்து பாபநாசம் பஸ் டிப்போ வரை பிரதான சாலை உருக்குலைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் பிரதான சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைதொடர்ந்து முதற்கட்டமாக டாணாவில் இருந்து பாபநாசம் வரை சாலை அமைக்கும் பணிக்காக கடந்த 6 நாட்களுக்கு முன்பு இரவில் தோண்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு பணியை தொடங்கவில்லை.
இதனால் சாலையில் புழுதியாக பறப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் அவர்கள் மூக்கை மூடிக்கொண்டு பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டாணா, பாபநாசம் கோயில் பஸ் நிறுத்தங்களில் பொதுமக்கள் பேருந்திற்காக காத்திருக்கின்றனர்.
அப்போது வாகனங்களின் புழுதியால் மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும் பிரதான சாலையில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. வீடுகள் முழுவதும் புழுதியால் வருவதால் அவர்களும் பாதிக்கப்படுவதுடன் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த சாலையில் இதுவரை வாகன ஓட்டிகள் 15 பேர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

