×

மயிலாடுதுறையில் உலமாக்கள், உபதேசியார்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

மயிலாடுதுறை, டிச.22: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் தின விழாவில் உலமாக்கள் மற்றும் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் காந்த், வழங்கினார்.

இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் ஏழ்மை நிலையிலுள்ள ஆதரவற்ற /கணவரால் கைவிடப்பட்ட வயது முதிர்ந்த முஸ்லீம் மகளிர் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டரை பதவி வழி தலைவராகக் கொண்டு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இச்சங்கத்தினை துவக்க ரூ.1.00 லட்சம் அரசால் வழங்கப்பட்டது. மேலும் இச்சங்கத்தின் நன்கொடையாளர்கள் மூலம் திரட்டும் நிதி ஆதாரத்திற்கு இணையாக 12 என்ற விகிதத்தில் அதிகபட்சம் ரூ.20 லட்சம் இணை மானியம் அரசால் சங்கத்திற்கு ஓர் ஆண்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் மூலம் தமிழ்நாட்டிaல் உள்ள இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் தர்க்காக்கள் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் இமாம், பேஷ்இமாம்கள், ஆலிம்கள், முத்தவல்லி, கபர்ஸ்தான் பணியாளர்கள், மோதினார்கள், பிலால்கள் அரபி ஆசிரியர்கள் /ஆசிரியைகள், மற்றும் இதரப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும், இவ்வாரியம் சார்பில் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித் தொகை-ரூ.1,25,000, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவிக்தொகைரூ. 10,000முதல் ரூ.1,00,000 வரை, இயற்கை மரணம் உதவித் தொகை ரூ.30,000, ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.5,000, திருமண உதவித்தொகை ரூ.5,000, மகப்பேறு உதவித் தொகை ரூ.6,000, கண்கண்ணாடி உதவித்தொகை ரூ.500, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் போன்ற நல்ல திட்டங்களை பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக, உலமாக்கள் மற்றும் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரியத்தின் அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் காந்த், வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்(பொ) உமாமகேஷ்வரன் கலந்து கொண்டார்.

Tags : Welfare Board ,Ulamas ,Upadeshiyars ,Mayiladuthurai ,Backward Classes ,Minorities Welfare Department ,Christian ,Minorities Day ,Mayiladuthurai District Collectorate ,Kanth ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்