விருதுநகர், டிச.22: விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது கேவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் தொடங்கி எஸ்பிஐ வங்கி அருகே நிறைவு பெற்றது. முன்னதாக இந்த பேரணியை விருதுநகர் மருத்துவ கல்லூரி முதன்மையர் ஜெயசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உள்பட அனைத்து தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.பேரணியைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். முடிவில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
