புதுச்சேரி அருகே சோகம் விஷம் குடித்து கணவன், மனைவி தற்கொலை

கண்டமங்கலம், டிச. 22: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சேஷங்கனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குறாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(85). இவரது மனைவி சந்திரா(71), மகன் விஜயன்(46). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மகன் விஜயன் சேலியமேடு பகுதியை சேர்ந்த சத்யா என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி இருவரும் ஒன்பது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு வசந்த் என்ற ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்யா பிரிந்து சென்றுவிட்டார். இதனால் விஜயன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் விஜயன் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதனால் குடும்பம் நடத்துவதற்கு போதுமான பணம் இல்லாததால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது, கார்த்திகேயன், சந்திரா ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர். மகன் விஜயன் மட்டும் மயக்கமான நிலையில் இருந்து உள்ளார். உடனடியாக அவரை மீட்டு மண்ணாடிபட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், வறுமையின் உச்சத்தின் காராணமாக 3 பேரும் தற்கொலை செய்ய முடிவெடுத்து பூச்சி மருந்து குடித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், எங்களுடைய சாவுக்கு யாரு காரணம் இல்லை என்று எழுதி இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: