×

சாதி, மத உணர்வுகளை தூண்டுவது ஆபத்தான செயல் மதுரையை சனாதன மையமாக சிலர் மாற்ற பார்க்கிறார்கள்: திருமாவளவன் குற்றச்சாட்டு

மதுரை: மதுரையை சிலர் சனாதன மையமாக மாற்றப் பார்க்கிறார்கள் என திருமாவளவன் பேசினார். மதுரையில் எவிடென்ஸ் கதிர் எழுதிய ‘‘கருப்பு ரட்சகன்’’ நாவல் வெளியீட்டு விழா உலக தமிழ்சங்கத்தில் நேற்று நடந்தது. விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், இயக்குநர்கள் வெற்றிமாறன், சரவணன், நடிகர் சசிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் திருமாவளவன் எம்பி பேசியதாவது: தேர்தல் களத்தில் நான் எடுக்கிற முடிவுகள் வெளியில் உள்ளவர்கள் பார்வையில் சில நேரத்தில் பிழையாக தெரியலாம். கூட்டணிக்காக உரிமைகளை விட்டுக்கொடுத்து, மக்களை மறந்து தனி நபராக என்னுடைய நலன் குறித்து நான் சிந்தித்ததே கிடையாது. அப்படி எந்த முடிவையும் நான் எடுத்ததில்லை. நான் தேர்தல் நேரத்தில் மட்டுமே தேர்தலை பற்றி பேசுவேன். சீட் எத்தனை பெறுகிறேன் என்பது என் பிரச்னையல்ல.

சீட் எண்ணிக்கை மாறுவதால் நான் முதலமைச்சர் நாற்காலியில் போய் அமர போவதில்லை. பதவி எனக்கு பெரிதல்ல. 10 சீட் கூடுதலாக வாங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. சீட் தான் வேண்டும் என்றால் அதை அதிகமாக தருகிற கட்சியோடு போய் சேரலாம் அல்லவா? இவ்வளவு விமர்சனங்களுக்கு பின்னரும் திமுக கூட்டணியில் தொடர்வதற்கு பதவி ஆசை இல்லாததே காரணம். மதுரையை சிலர் சனாதன மையமாக மாற்ற பார்க்கிறார்கள். சாதி சங்கங்களை அணுகி சாதி உணர்வுகளை திட்டமிட்டு வளர்க்கிறார்கள். ஜனநாயக உணர்வை சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக, சாதி, மத உணர்வுகளை தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல்.

பெரியாரை வெளிப்படையாக, பிராமண கடப்பாரையை கொண்டு இடிப்போம் என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது. வலதுசாரிகளின் ஆதிக்கத்தால் இந்த விளைவுகள் உருவாகி வருகிறது. சகோதரத்துவத்தை தகர்க்க பார்க்கிறார்கள். உண்மையான தமிழ் தேசியம் என்பது சனாதன எதிர்ப்பில் தான் அடங்கியிருக்கிறது. மத வழி தேசியத்தை எதிர்ப்பது தான் உண்மையான தமிழ் தேசியம். இந்தியா முழுமைக்கும் ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என்பது பாஜவின் அரசியல். அதை எதிர்ப்பதற்கான ஆயுதமாக நாம் முன்வைக்கும் பெரியாரையே இல்லாமல் ஆக்குவோம் என சொல்வது ஆபத்தான விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Madura ,Sanadana ,Thirumaalavan ,Madurai ,Sanathana ,Evidence Kadir ,World Tamil Nadu ,Vice President ,Thirumavalavan ,CPM ,Secretary of State ,
× RELATED தேசிய கிராமப்புற வேலை உறுதி...