முதல்வர் ரங்கசாமியையும் சந்திக்க திட்டம் பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று புதுவை வருகை பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்

புதுச்சேரி, டிச. 20: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் வேலைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கி விட்டன. யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, விருப்பமனு பெறுதல், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பை எட்டியுள்ளன. புதுச்சேரியில் பாஜகவுடன் அவ்வப்போது என்ஆர் காங்கிரஸ் மோதல் போக்கை கடைபிடித்துவரும் நிலையில் 2026 ெபாதுத்தேர்தலில் கூட்டணி தொடருமா? என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் உள்ளது. நடிகர் விஜய் கட்சி முதல்வர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகின. சமீபத்தில் முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பாஜ தலைவர் விபி ராமலிங்கம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த நிலையில் அகில இந்திய பாஜக புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின், தனது முதல்கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று (20ம்தேதி) புதுச்சேரி வருகிறார். இதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து காரில் மதியம் 1.15 மணியளவில் புதுச்சேரி வந்தடைகிறார். அவருக்கு புதுச்சேரி கோரிமேடு எல்லையில் பாஜகவினர் வரவேற்பு அளிக்கின்றனர். அதைத் தொடர்ந்து பாரதியார், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் அவர், பிற்பகல் 3.15க்கு பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பூத்கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், கட்சி நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார்.

அன்றிரவு புதுச்சேரியில் தங்கும் நிதின் நபின், மறுநாள் காலை 8.30 மணிக்கு அரவிந்தர் ஆசிரமம் செல்கிறார். தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் மணவெளி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், 10.15 மணியளவில் முதல்வர் ரங்கசாமி, கவர்னர் கைலாஷ்நாதன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து கனகசெட்டிகுளத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கும் அவர், அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டத்திலும் பங்கேற்கிறார். பின்னர் மாலையில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். புதிய தேசிய செயல் தலைவரான நிதின் நபினுடன், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் புதுச்சேரி வருவதால் புதுச்சேரி மாநில பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: