நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை, ஜன.20:  பாளை  ஐகிரவுண்ட் பல்நோக்கு மருத்துவமனை அருகே ஆட்டோ  நிறுத்தம், பெயர் பலகை, மற்றும் சங்க கொடி அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி  சிஐடியு  ஆட்டோ தொழிலாளர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட சிஐடியு ஆட்டோ  ஓட்டுநர் சங்கம் சார்பில்  200 ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன. 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் நல  வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்து அரசின் சட்ட சலுகைகளை பெற்று  வருகின்றனர். இதனிடையே பாளை ஐகிரவுண்ட் பல்நோக்கு மருத்துவமனை அருகில்  சிஐடியு ஆட்டோ நிறுத்தம், பெயர் பலகை மற்றும் சங்க கொடி வைக்க ஐகிரவுண்ட் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் ஆகியோர்  எதிர்ப்பு தெரிவித்து பெயர் பலகை அகற்றப்பட்டது. இதுதொடர்பாக மாநகர போலீஸ்  கமிஷனரிடம் மனு அளித்தும் இதுவரை பதில் இல்லை. இந்நிலையில்  பாளை  ஐகிரவுண்ட் பல்நோக்கு மருத்துவமனை பகுதியில் ஆட்டோ தொழிற்சங்கம் பெயர் பலகை  வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு  ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமையில் நெல்லை  கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு மாவட்ட செயலாளர்  மோகன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் முருகன், மண்டல தலைவர்  சுடலைராஜ், மாநில குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து கோரிக்கை தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

Related Stories: