நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் மேலும் 3 முக்கிய நபர்கள் கைது

புதுச்சேரி, டிச. 17: புதுச்சேரி உள்ளிட்ட நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள போலி மருந்து மோசடி வழக்கில் மேலும் முக்கிய குற்றவாளிகள் 3 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் டெல்லியை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து அனுப்பி நாடு முழுவதும் விற்ற ரெட்டியார்பாளையம் ஜெயாநகரில் வசித்து வந்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பனை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், பிரபல கம்பெனிகள் தயாரிக்கும் விலை உயர்ந்த மருந்துகளை போலியாக தயாரித்து, உரிமம் பெற்ற, செயல்படாத ஏஜென்சிகள் மூலம் வடமாநிலங்களில் விற்றது தெரியவந்தது.

இதற்கிடையே, இவ்வழக்கில் தொடர்புடைய, போலி மருந்துகளை மொத்த விற்பனையாளரான புதுச்சேரி இளங்கோ நகரில் வசித்த சீர்காழியை சேர்ந்த ராணா, காரைக்குடியை சேர்ந்த மெய்யழகன் ஆகிய 2 பேர் முதன்முதலாக கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி ராஜா மற்றும் அவருக்கு உதவியாக குடோன்கள் நடத்தி வந்த புதுச்சேரி அரியூர் சிவராந்தகத்தை சேர்ந்த விவேக் ஆகிய 2 பேரும் புதுச்சேரி கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று தலைமறைவாகினர். இதனிடையே சிறையில் அடைக்கப்பட்ட ராணாவும் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். முன்ஜாமீன் பெற்ற ராஜா, விவேக் ஆகியோர் கடந்த 10ம் தேதி புதுச்சேரி கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து ராஜாவுக்கு போலி மருந்து தயாரிக்க உதவியாக இருந்த புதுச்சேரி மற்றும் கடலூரை சேர்ந்த 9 பேரை கடந்த 11ம்தேதி கைது செய்தனர்.

இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழுவும் தீவிர விசாரணையில் இறங்கியது. இதற்கிடையே, ராணா, மெய்யப்பன் ஆகியோர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர். வட மாநிலங்களில் அதிகளவில் போலி மருந்து விற்பனை செய்ததில் ஆக்ரா, மிர்சாபூர் ஆகிய காவல் நிலையங்களில் ராஜா, விவேக், ராணா ஆகியோர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளை புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் கைது செய்திருப்பதை அறிந்த ஆக்ரா போலீசார் கடந்த 13ம் தேதி புதுச்சேரி வந்தனர்.

மற்றொரு வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதால் 18ம் தேதிக்கு பிறகு ராஜா, விவேக் ஆகியோரை அழைத்து செல்லுமாறு ஆக்ரா போலீசாரிடம் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ள சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி கூறினார். இதனை ஏற்ற ஆக்ரா போலீசார், அதே வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள ராணாவை புதுச்சேரி இளங்கோ நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து, ஆக்ராவுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் போலி மருந்து கம்பெனி நடத்திய முக்கிய குற்றவாளியான ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் பாபுஜி நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நேற்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

பல்வேறு முன்னணி கம்பெனிகளின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி மருந்துகளை வடமாநிலங்களுக்கு சப்ளை செய்வதற்காகவே புதுச்சேரியில் 2 கம்பெனிகளை ராஜா நடத்தி வந்துள்ளார். அந்த கம்பெனிகளின் கணக்கு வழக்குகள் மற்றும் நிர்வாகத்தை கவனித்து வந்த புதுச்சேரி அரியாங்குப்பம், பூங்கொடி புரத்தைச் சேர்ந்த அசோக்ராஜ் மனைவி சுதாலட்சுமி (34), அசோக்ராஜ் (37), உழவர்கரையைச் சேர்ந்த ராஜேஷ் (40) ஆகிய 3 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம், எந்தெந்த கம்பெனிகளின் பெயரில், எவ்வளவு போலி மருந்துகள், எந்தெந்த மாநிலங்களுக்கு அனுப்பி மோசடி செய்துள்ளனர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்தனர். அதன்பிறகு 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வாளர் இன்று ஆஜர்
புதுச்சேரி திருபுவனைபாளையம் போலி மருந்து தொழிற்சாலை மற்றும் சில குடோன்கள் ஏற்கனவே 2022ல் சீல் வைக்கப்பட்டது. ஆனால் சீல் வைக்கப்பட்ட திருபுவனைபாளையம் போலி மருந்து தொழிற்சாலையும், குடோன்ங்களும் தொடர்ந்து இயங்கி வந்துள்ளது. இதனை கண்காணிக்க வேண்டிய சுகாதாரத்துறையின்கீழ் செயல்படும் மருந்து கட்டுபாட்டுத் துறையை சேர்ந்த 5 அதிகாரிகளை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக 5 அதிகாரிகளுக்கும் எஸ்ஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆஜராகாவிட்டால், அவர்களை கைது செய்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் மருந்து கட்டுப்பாட்டு துறையை சேர்ந்த மருந்து ஆய்வாளர் ஒருவர், சிபிசிஐடி காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேற்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகத நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராவார் என தெரிகிறது.

13 போலி மருந்துகள் எவை? சிறப்பு குழு விசாரணை
சென்னை மாதவரத்தில் செயல்படும் பன்னாட்டு மருந்து கம்பெனி மேலாளர் பாக்கியராஜ், மேட்டுப்பாளையம் போலீசில் கடந்த 11ம்தேதி ஒரு புகார் அளித்தார். அதன்பேரில் ராஜா, விவேக் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். நேற்று முன்தினம் இவ்வழக்கு அங்கிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தியது. தற்போது சிறப்பு புலனாய்வு குழுவும் இதுதொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளது. புகார் அளித்த பன்னாட்டு மருந்து நிறுவனமானது கைப்பற்றப்பட்ட 34 போலி மருந்துகளில், தனது நிறுவனத்தின் பெயரில் மட்டும் 13 போலி மருந்துகளை தயாரித்துள்ளதாக முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: