×

உடுமலை- சின்னார் செக்போஸ்ட் எஸ் பெண்டில் சிக்கி தவித்த வாகனங்கள்

உடுமலை : உடுமலை- சின்னார் செக்போஸ்ட் இடையே உள்ள எஸ் பெண்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் அதிமாக இருந்தததால் வாகனங்கள் சிக்கி தவித்தன. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காந்தலூர், மறையூர் மற்றும் மூணார் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

குறிப்பாக தமிழக அரசு பேருந்துகளும், கேரள அரசு பேருந்துகளும், சுற்றுலா வாகனங்களும், இரு மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கிராம மக்களை ஏற்றிச் செல்லும் ஜீப்களும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பயணிக்கின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியை ஒட்டி செல்கின்ற இந்த சாலை சுமார் 13 கி.மீ தொலைவிற்கு தமிழக எல்லையான சின்னார் செக் போஸ்ட் வரை மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது.

ஏழுமலையான் கோவில், கோடந்தூர் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி உடுமலை, மடத்துக்குளம், திண்டுக்கல், பழனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த வழித்தடத்தில் தான் பயணிக்கின்றனர்.

இது தவிர கல்லூரி மாணவர்கள், டிரக்கிங் செல்பவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் பலரும் அவ்வப்போது இருசக்கர வாகனங்களில் தமிழகத்தில் இருந்து 9/6 செக்போஸ்ட் வழியே கேரளா சென்று வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் கேரள மாநில எல்லைக்கு பிறகு சாலை வசதி நன்றாக இருப்பதாக கூறும் வாகன ஓட்டிகள் தமிழக எல்லைக்குள் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஆப்ரோடு கண்டிசனில் உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.புதிதாக சாலை விரிவாக்கம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. மேடும், பள்ளமுமாக உள்ள சாலையை சமமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

எதிரே வருகின்ற வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சாலையை விட்டு இறங்கினால் மீண்டும் சாலையில் ஏறமுடியாத அளவிற்கு சாலைகள் மிக உயரமாக உள்ளதால் வாகனஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக கொண்டை ஊசி வளைவு, எஸ் பெண்டு பகுதிகளில் சாலையை விட்டு இறங்கினால் மீண்டும் வாகனங்கள் சாலையில் ஏற முற்படும் போது டயர்கள் வெடித்து விபத்து ஏற்படும் அபாய சூழல் ஏற்படுகிறது. அதன்படி நேற்றும் எஸ் பெண்டில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்தன.

மலை வழிப்பாதை என்பதால் மிகவும் குறுகலான இந்த சாலையில் வாரவிடுமுறை தினங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தார் ரோட்டில் இருந்து மண்ரோடு ஒரு அடி முதல் ஒன்றரை அடி தாழ்வாக அமைந்துள்ளது.

கேரள மாநிலத்தை போல தமிழகத்திலும் மலைவழிப்பாதையை அகலப்படுத்தி சீரமைத்தால் வணிக பயன்பாட்டிற்கும், சுற்றுலா பயன்பாட்டிற்கும் ஏற்ற நிலையில் அமையும் பொருட்டு கூடுதல் வருவாய் கிடைக்கும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Udumalai-Cinnar ,Udumalai ,Cinnar ,Tiruppur district ,Kandalur ,Maraiyur ,Munnar ,Idukki district ,Kerala ,
× RELATED காவேரிப்பட்டணம் அருகே 2000 ஆண்டுகளுக்கு...