வருசநாடு : கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத் உட்பட்ட தும்மக்குண்டு வாலிப்பாறை காந்திகிராமம் போன்ற மலைப்பகுதியில் சர்க்கரைக்கொல்லி மூலிகைகள் அதிகளவில் விளைகின்றன. தற்போது கிலோ ரூ.80 முதல் ரூ.85 வரை விற்பனை போய்க்கொண்டிருக்கிறது.
இதனால் ஏழை, எளியோர் வாழும் பகுதியான தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் இந்த மூலிகை பறிக்கும் வேலையை பொருளாதாரம் ஈட்டும் முழுநேர வேலையாக செய்து வருகின்றனர்.
மூலிகை இலைகள் பறிக்கும் பணிக்கு நாள் ஒன்று ரூ.300 முதல் ரூ.500 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால், தற்போது மூலிகைகள் பறிக்கும் பணிகள் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மூலிகைக்கு வெளிமார்க்கெட்டில் அதிக டிமாண்ட் இருப்பதால் வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து மலை கிராமவசி கருப்பையா கூறுகையில், ‘‘சர்க்கரை நோயாளிகள் இதுபோன்ற மூலிகைகளை தினந்தோறும் அருந்தி வந்தால் நோயில் இருந்து விடுபடலாம். மேலும் நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மை அதிக அளவில் உள்ளது.
ஆனால் கடமையில் மயிலை ஒன்றியத்தில் மூலிகை நிறைந்த பகுதி. இதன் மகத்துவம் அறியாமல் மக்கள் தங்களது பொருளாதார வாழ்வுக்காக குடிசை தொழிலாக இதனை பார்த்து வருகின்றனர். எனவே அரசு இதனை லாபமாக்கும் தொழிலாகவும், மதிப்புகூட்டு பொருளாக மாற்றி கிராம மக்களின் வாழ்வினை மாற்றும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்’’ என்றார்.
