புதுடெல்லி: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக தவெக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி ஜேகே மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆணையத்தை பொறுத்த வரை விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணைக்குள் தலையிடாமல் தனியாக சுயா தீன விசாரணையை நடத்தும். எனவே தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும். குறிப்பாக, எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணங்களை பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது.
ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை வைக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் ஆணையத்துக்கு தடை விதித்துள்ளது. எனவே தடையை நீக்க வேண்டும்.அதேபோல, உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு அஸ்ரா கர்க் என்ற திறமையான அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டது. அவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் அல்ல, ஆனால் தமிழக பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. அவருடைய தலைமையில் வைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறானது” என்று தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “கரூர் சம்பவம் தொடர்பான மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முன்னதாக விசாரித்ததில் குழப்பம் உள்ளது. சில தவறுகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் .
குறிப்பாக, உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என்றே கருதுகிறோம். ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற கிளை விசாரணை நடத்தி வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற பிரதான அமர்வு எவ்வாறு கரூர் தொடர்பான இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது என்பது தொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த பின்பாக, அதுகுறித்து விவாதிக்கலாம். எனவே இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.மேலும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்று” உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
