சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2-வது கட்டமாக நாளை முதல் கூடுதல் பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; மகளிர் மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
இதில் விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு நாளை முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. மதியம் 3 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், சுய உதவி குழுக்கள், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களினால் பயன்பெற்ற மற்றும் சாதனை பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக மாநில அளவில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
