×

வாக்கு திருட்டு குறித்து நேருக்குநேர் விவாதம் நடத்த தயாரா? அமித்ஷாவுக்கு சவால் விடுத்த ராகுல் காந்தி: மக்களவையில் எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் அனல் தெறிக்கும் சம்பவம்

புதுடெல்லி: வாக்கு திருட்டு குறித்து தனது பத்திரிகையாளர் சந்திப்பில் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி சவால் விடுத்த சம்பவம் மக்களவையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் அமித்ஷா-ராகுல் காந்தி இடையே நடந்த காரசார விவாதத்தில் இந்த சவாலால் அமித்ஷா திக்குமுக்காடினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) உள்ளிட்ட தேர்தல் சீர்த்திருத்தங்கள் தொடர்பாக மக்களவையில் 10 மணி நேர விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து பாஜ செய்யும் வாக்கு திருட்டு தான் மிகப்பெரிய தேச விரோதம்’ என பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினார். ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றைய விவாதத்தில் காங்கிரசை கடுமையாக தாக்கிப் பேசினார். நாடாளுமன்றத்தில் எந்த பிரச்னை குறித்தும் விவாதம் நடத்த ஒன்றிய பாஜ அரசு தயங்காது, பயந்து ஓடாது எனக் கூறிய அமித்ஷா, எஸ்ஐஆர் பற்றி எதிர்க்கட்சிகள் தவறான கருத்தை பரப்புவதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு முன் முதல் முறையாக 1952ம் ஆண்டு நேரு ஆட்சியில் இருந்து இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சியிலும் எஸ்ஐஆர் தொடர்ந்திருப்பதாகவும், அப்போதெல்லாம் எந்த கட்சியும் எதிர்க்காத நிலையில் இப்போது மட்டும் எதிர்க்கட்சிகள் எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். எஸ்ஐஆரை எதிர்ப்பதன் மூலம் வெளிநாட்டவர்களை பாதுகாக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாகவும் இதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு களங்கம் விளைவிப்பதாகவும் அமித்ஷா கூறினார்.

பிரதமரும், மாநில முதல்வர்களும் வெளிநாட்டவர்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்பட்டால் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க முடியுமா என கேள்வி எழுப்பிய அமித்ஷா, வாக்கு இயந்திரம் மீது குறை கூறி வந்த காங்கிரஸ் இப்போது புதிதாக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கூறுவதாக விமர்சித்தார். அவர்களின் வாக்கு திருட்டும் பீகார் தேர்தலில் எடுபடாமல் போனதாக கூறிய அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அரியானாவில் நடந்த வாக்கு திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அமித்ஷா விளக்கம் அளித்தார்.

அப்போது ராகுல் காந்தி குறுக்கிட்டு பேசியதால் அவருக்கும் அமித்ஷாவுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘‘அரியானாவில் எனது வாக்கு திருட்டு குற்றச்சாட்டு குறித்து அமித்ஷா விளக்கம் அளித்தார். ஆனால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் ஆணையர்களுக்கு முழு விலக்கு அளிக்கும் சட்டத்தை ஏன் கொண்டு வந்தீர்கள் என்பது உள்ளிட்ட எனது எந்த கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை. அரியானாவில் 19 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இது தொடர்பாக எங்களிடம் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அதைப் பற்றி எல்லாம் விவாதம் நடத்த அமித்ஷா தயாரா? கடந்த 3 பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து எனது பத்திரிகையாளர் சந்திப்பில் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த வருவீர்களா?’’ என கேள்வி எழுப்பினார்.

இதனால் அவையில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. இதை எதிர்பார்க்காத அமித்ஷா, ‘‘எதிர்க்கட்சி தலைவர் முதலில் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கூறுகிறார். ஆனால் நாடாளுமன்றம் ஒன்றும் உங்கள் விருப்பப்படி செயல்பட முடியாது. நான் என்ன பேச வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். நீங்கள் அதை வடிவமைக்க முடியாது. யாருடைய விருப்பத்திற்காகவும் எனது விவாதத்தை மாற்ற முடியாது’’ என்றார். இதன் பிறகும் அமித்ஷா காங்கிரசை தொடர்ந்து விமர்சித்து பேசினார். ‘‘சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேலை 28 பேர் ஆதரித்தனர்.

நேருவை 2 பேர் மட்டுமே ஆதரித்தனர். ஆனால் நேரு பிரதமர் ஆனார். இது முதல் வாக்கு திருட்டு. நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்த போது இந்திராகாந்தியால் 2வது வாக்கு திருட்டு நடந்தது. இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா காந்தி வாக்களித்ததன் மூலம் 3வது வாக்கு திருட்டு நடந்தது. காங்கிரசின் தொடர் தோல்விகளுக்கு அதன் தலைமை தான் காரணம்’’ என அமித்ஷா பேசியதால் அவரது பேச்சின் பாதியிலேயே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

* அமித்ஷாவின் பதில்: பயத்தின் பிரதிபலிப்பு
வெளிநடப்பு குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ‘‘அமித்ஷாவின் பதில் தற்காப்புடன் இருந்தது. இது அவர்களின் பதற்றம், பயத்தின் பிரதிபலிப்பு. நாங்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. வெளிப்படையான வாக்காளர் பட்டியல்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கட்டமைப்பு குறித்த தெளிவு அல்லது எனது பத்திரிகையாளர் சந்திப்புகளில் நான் வழங்கிய உறுதியான ஆதாரம் பற்றி அவர் பேசவில்லை’’ என்றார்.

Tags : Rahul Gandhi ,Amit Shah ,Lok Sabha ,SIR ,New Delhi ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள...