×

சர்வதேச மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்களுக்கு 3 புதிய திட்டங்கள் வெளியாகிறது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

திருமலை: சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்கு 3 முக்கிய திட்டங்களை வெளியிட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சர்வதேச மகளிர் தினம் வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனுடன் கிராம வறுமை ஒழிப்பு அமைப்பு ஆந்திராவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனையொட்டி ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு பெண்களுக்காக 3 முக்கிய திட்டங்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி என்.டி.ஆர். வித்யாலட்சுமி, என்.டி.ஆர். கல்யாணலட்சுமி மற்றும் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. என்.டி.ஆர். வித்யாலட்சுமி திட்டம் என்பது குழந்தைகளின் கல்விக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்தது ஆறு மாதங்களாக துவாக்ரா சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும். பெண்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.

அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான செலவுகளுக்காக ரூ.10,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இத்தொகையை 48 மாதங்களுக்குள் எளிய தவணைகளில் செலுத்தலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பிறகு, தகுதியை பொறுத்து 48 மணிநேரத்திற்குள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும்.

என்.டி.ஆர். கல்யாண லட்சுமி திட்டம் என்பது மகளின் திருமணத்துடன் தொடர்புடையது. குறைந்தது 6 மாதங்களாக துவாக்ரா சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள். இத்திட்டத்தின் மூலம், மகளின் திருமண செலவுகளுக்கு ரூ.10,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கடன் பெறலாம். விண்ணப்பித்தால், மகளின் திருமணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு பணம் வங்கி கணக்கை வந்தடையும். இத்தொகையை 48 மாதங்களுக்கு மேல் எளிய தவணைகளில் 25 பைசா வட்டியுடன் செலுத்தலாம்.

மூன்றாவது மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கான இலவச ஸ்மார்ட்போன்கள் திட்டம். துவாக்ரா சங்கங்களின் மேலாண்மை, பதிவுகள் மற்றும் கணக்கியலை எளிதாக்கும் வகையில் 27,500 அனிமேட்டர்கள் மற்றும் 5,000 சமூக ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும். கூடுதலாக, 600 ஏபிஎம்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும். இத்திட்டங்களுக்காக அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க உள்ளதாக தெரிகிறது. இத்திட்டங்களை அறிவித்து உடனடியாக அமல்படுத்த முதல்வர் சந்திரபாபுநாயுடு அதிகாரிகளுடன் தற்போது ஆலோசித்து வருகிறார். புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை மகளிர் தினத்தன்று அவர் வெளியிடுவார் என தெரிகிறது.

Tags : Andhra Pradesh ,International Women's Day ,CM ,Chandrababu Naidu ,Tirumala ,Chief Minister ,Village Poverty Alleviation Organization… ,
× RELATED நாளை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைப்பு!