மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அலுவலர்களை நியமிக்க உத்தரவு: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வரும் ஜன. 15 வரை அவகாசம்

புதுடெல்லி: வருகிற 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக அலுவலர்களை நியமிக்க வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு காலக்கெடு விதித்துள்ளது. இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். வரவிருக்கும் 2027ம் ஆண்டு கணக்கெடுப்பை முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தவும், சாதிவாரி விவரங்களை உள்ளடக்கவும் ஒன்றிய அமைச்சரவைக் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது.

சுமார் 30 லட்சம் களப்பணியாளர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ள இந்த மெகா கணக்கெடுப்பு பணிக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் இந்தியப் பதிவாளர் ஜெனரல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், களப்பணிகளை மேற்கொள்ளும் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதிக்குள் முழுமையாக முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதில், ‘ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது அரசு அதிகாரிகளை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம்; ஆறு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என்ற விகிதத்தில் நியமனம் செய்ய வேண்டும்.

இதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. களப்பணிக்கு தேர்வு செய்யப்படும் அலுவலர்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்; அவசரத் தேவைகளுக்காகக் கூடுதலாக 10 சதவீத பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முதற்கட்டமாக வீடுகளைப் பட்டியலிடும் பணி வரும் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரி மாதத்திலும் நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: