புதுடெல்லி: இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயர் இடம்பெற்றதாகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி என்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘சோனியா காந்தி 1983ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற்றார்; ஆனால், அதற்கு முன்பாகவே 1980ம் ஆண்டிலேயே புதுடெல்லி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இது மோசடி மற்றும் தேர்தல் முறைகேடு என்று அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவில், ‘தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் விவகாரங்களில் விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை; மனுதாரர் சான்றளிக்கப்படாத நகல்களை மட்டுமே தாக்கல் செய்துள்ளார்’ என்றும் கூறி அந்த மனு நிராகரிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தற்போது டெல்லி அமர்வு நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை மனுதாரர் தாக்கல் செய்தார்.
அதில், ‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதில் உள்ள முறைகேடுகள் குறித்து காவல் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற சிறப்பு நீதிபதி விஷால் காக்னே, இதுதொடர்பாக சோனியா காந்திக்கும், டெல்லி அரசுக்கும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார். மேலும், கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி 6ம் தேதி நடைபெறும் நிலையில், காவல் துறை விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்பது அப்போது தெரியவரும்.
