அவிநாசியில் இருந்து கோவில்வழிக்கு மீண்டும் பஸ் இயக்கம்

திருப்பூர், ஜன.17: அவிநாசியில் இருந்து கோவில் வழிக்கு மீண்டும் பஸ் இயக்கம் தொடங்கியதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருப்பூர் பழைய பஸ் நிலையத்தை இடித்து, நவீன பஸ் நிலையம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பழைய பஸ் நிலையம் இடிக்கப்பட்டதால், யுனிவர்சல் தியேட்டர் அருகிலும், மாவட்ட கலெக்டர் அலுவலக முகப்பு பகுதியிலும், கோவில்வழி பகுதியிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் கோவில்வழி பகுதியிலிருந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி, அவிநாசி ரோடு பகுதியில் இருந்து கோவில்வழி பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகத்தால் 6 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு அந்த பஸ்கள் முன்னறிப்பு ஏதுமின்றி திடீரென நிறுத்தப்பட்டது. இது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கடந்த 10ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் அவிநாசியில் இருந்து கோவில்வழி பஸ் நிலைத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>