பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பால் பண்ணை விலை ரூ.23 ஆனது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, வெளி மாவட்டங்களுக்கும். வெளி மாநிலங்களுக்கும், விற்பனைக்காக அதிகளவு இளநீர் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு சில மாதமாக மழை குறைவால் இளநீர் அறுவடை அதிகமானது. இதனால் வெளியூர்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் தினமும் 3.50 லட்சம் வரையிலான இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலை கடந்த நவம்பர் மாதம் இறுதிவரை இருந்தது.

அதன்பின், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வலுத்ததால், வெளி மாவட்டங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைந்தது. தற்போது இளநீர் உற்பத்தி அதிகரிப்பால், அறுவடை செய்யப்பட்ட இளநீர் தேக்கமடையாமல் இருக்க பண்ணை விலை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தோட்டங்களில் பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.23 ஆக சரிந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு தோட்டங்களில் நேரடி விலையாக ஒரு இளநீர் ரூ.33 வரை விலை போனது. ஆனால் ஒரே மாதத்தில் ரூ.10 வரை குறைந்து தற்போது ரூ.23ஆக சரிந்துள்ளது. இதனால் உரிய விலை கிடைப்பதில்லை என தென்னை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கனமழை காரணமாக சென்னை மற்றும் விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பொள்ளாச்சியிலிருந்து இளநீர் அனுப்பும் பணி கடந்த இரண்டு வாரமாக மிகவும் குறைந்தது. இதையடுத்து, தற்போது பெரும்பாலான வியாபாரிகள், மும்பை மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீரை லாரிகள் மூலம் அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் வரை பெய்த மழையின் காரணமாக இளநீரின் விற்பனை மந்தமானது. பண்ணைகளில் விவசாயிகளிடம் வாங்கும் இளநீரின் விலையும் ரூ.20 ஆக சரிந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை குறைந்தால் மட்டுமே மீண்டும் பொள்ளாச்சியிலிருந்து வெளியூர்களுக்கு கூடுதல் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: