வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் தவறான நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கு இழப்பு என்று முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நீண்டகாலமாகவே நல்லுறவு இருந்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்திருந்தது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த இந்தியாவுக்கு 50 சதவீத வரி, பாகிஸ்தானுடன் நெருக்கம் உள்ளிட்ட சில வெளியுறவுத் துறை முடிவுகள், இந்தியாவுடனான உறவில் பின்னடைவை ஏற்படுத்தியதாகவும், இது ரஷ்யாவுடன் இந்தியா மேலும் நெருக்கமாவதற்கு வழிவகுத்ததாகவும் தற்போது அமெரிக்காவிலேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டின் மூத்த ஆய்வாளரும், முன்னாள் பென்டகன் அதிகாரியுமான மைக்கேல் ரூபின் அளித்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், ‘இந்தியா மற்றும் ரஷ்யாவை ஒன்றாக இணைத்ததற்காக டிரம்பிற்கு நோபல் பரிசே வழங்கலாம்; அந்தளவிற்கு அவரது திறமையின்மை வெளிப்பட்டுள்ளது. டிரம்பின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் புகழ்ச்சிக்கு மயங்கி அவர் எடுத்த முடிவுகள், இந்தியாவுடனான அமெரிக்க உறவைச் சீர்குலைத்துவிட்டது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விமர்சிப்பது நியாயமற்றது; இந்தியத் தலைவர்கள் தங்கள் நாட்டு மக்களின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். மலிவு விலையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல், இந்தியாவைக் குறை கூறுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்குத்தான் இழப்பு’ என்றும் மைக்கேல் ரூபின் ஆவேசமாகத் தெரிவித்தார்.
* பிரதமர் மோடியிடம் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமெரிக்க பாடகி ஆவேசம்
இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடியிடம், டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி மேரி மில்பென் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ பிரதமர் மோடி புவி அரசியலின் மையப்புள்ளியில் இருக்கிறார். உலக அரசியலில் பிரதமர் மோடி மிகவும் முக்கியமான மற்றும் அதிக செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார். அதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினரின் சமீபத்திய போக்கு மிகவும் கொடுமையானது. பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும். பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்டு, இருநாடுகளுக்கு இடையேயான உறவை மீண்டும் சரிசெய்ய வேண்டும்’ என்றார்.
* டிரம்பிற்கு பாகிஸ்தான் லஞ்சம் தந்ததா?
பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் மேலும் கூறுகையில்,’அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை தலைகீழாக மாற்றிய டிரம்பின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க குடிமக்கள் திகைத்துப் போயுள்ளனர். டிரம்பை எது தூண்டுகிறது என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை அது பாகிஸ்தானியர்களின் முகஸ்துதியாக இருக்கலாம். பாகிஸ்தானியர்கள் அல்லது துருக்கி மற்றும் கத்தாரில் உள்ள அவர்களின் ஆதரவாளர்கள் டிரம்பிற்கு லஞ்சம் கொடுத்திருக்கலாம். இது அமெரிக்காவை பல தசாப்தங்களாக ஒரு பெரிய சிக்கலில் சிக்க வைக்கும் ஒரு பேரழிவு தரும் லஞ்சம்.
அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், இந்தியர்கள் இந்திய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்தனர். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. அது விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறது. இந்தியாவுக்கு வரிவிதிக்கும் போது நாம் பாசாங்குத்தனமாக நடந்து கொள்கிறோம். அதற்கு பதில் அமெரிக்கா இந்தியாவுக்கு மலிவான விலையில் எரிபொருளை வழங்க வேண்டும். அதற்கு நம்மிடம் பதில் இல்லையென்றால், நமது சிறந்த அணுகுமுறை வெறுமனே வாயை மூடிக்கொள்வதே ஆகும் ’ என்று விளாசினார்.
