துபாய்: அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் அதன் அணுசக்தி மையங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் முக்கியமாக குறிவைத்துள்ளன. ஈரானின் முக்கியமான நடான்ஸ், இஸ்பஹான் உள்ளிட்ட அணு சக்தி மையம் பூமிக்கு அடியில் மிகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுசக்தி மையங்களை தகர்க்க பூமியை துளைக்கும் மிகுந்த சக்திவாய்ந்த ஏவுகணைகள் தேவை. கடந்த ஜூன் மாதம் 12 நாள் போரின் போது அமெரிக்கா இந்த அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதில் இவை சேதமடைந்தன.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் முதல் 2 நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அணுசக்தி மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதில் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் நுழைவாயில் பகுதி சேதமடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது. அணுசக்தி தளத்தின் நிலத்தடி பகுதி நுழைவாயில் கட்டிடங்கள் சமீபத்திய சேதத்திற்கு உள்ளாகி இருப்பது செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த அமைப்பு கூறி உள்ளது.
மேலும் இந்த தாக்குதலால் எந்த கதிரியக்க கசிவு அபாயமும் ஏற்படவில்லை என்றும் கூறி உள்ளது. இதுதவிர இஸ்பஹான் அணுசக்தி மையத்திற்கு அருகே நேற்று பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஈரானின் சக்திவாய்ந்த ஷாஹித் 136 டிரோன் தயாரிக்கப்படும் மேற்கு ஈரானில் உள்ள சோகா பால்க் இ ஆலை தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் செயற்கைகோள் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. தென்கிழக்கு ஈரானில் டெஹ்ரானில் இருந்து 800 கிமீ தொலைவில் உள்ள கெர்மானில் விமானப்படைதளம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 13 ஈரான் வீரர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
