வரதட்சணையாக நிலத்தை கேட்டு மனைவி கழுத்தை அறுத்த கணவன்

ஓசூர், ஜன.13: ஓசூரில் திருமணம் செய்த 3 மாதத்தில், பெண்ணிடம் வரதட்சணையாக நிலத்தை கேட்டு மனைவி கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் தொனமதுகூரை சேர்ந்தவர் சிவலிங்கா (35). கூலித் தொழிலாளி. இவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகா கதிரோபனப்பள்ளியைச் சேர்ந்த புவனேஸ்வரி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவலிங்கத்திற்கு இது 2வது திருமணமாகும். இந்நிலையில், தம்பதி இருவரும் ஓசூர் மோரனப்பள்ளியில் வசித்து வந்தனர். திருமணத்தின் போது புவனேஸ்வரியின் பெற்றோர் நிலம் தருவதாக சிவலிங்காவிடம் கூறியுள்ளனர். ஆனால், கூறியபடி நிலத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், நிலத்தை கேட்டு சிவலிங்கா புவனேஸ்வரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிவலிங்கா புவனேஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். மேலும், அவரது உடலிலும் கத்தியால் குத்தினார். இதில், பலத்த காயமடைந்த புவனேஸ்வரி ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புவனேஸ்வரியின் அக்கா வேதவதி ஓசூர் அட்கோ போலீசில் அளித்த புகாரின்பேரில் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து சிவலிங்காவை தேடி வருகிறார்.

Related Stories:

>