கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு; உச்சநீதிமன்ற மேற்பார்வை குழு வேலுச்சாமிபுரத்தில் மீண்டும் ஆய்வு

கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஏடிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் கடந்த 1ம் தேதி கரூர் சிபிஐ விசாரணை அலுவலகம் வந்தனர். இவர்களுடன் சிபிஐ டிஐஜி அதுல் குமார் தாக்கூரும் வந்தார். இதில் அவர்கள், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வேலுசாமிபுரத்திரத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், கரூர் கலெக்டர், திருச்சி மத்திய மண்டல ஐஜி, கரூர், எஸ்பி, டிஎஸ்பி ஆகியோரிடம் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், 3வது நாளாக நேற்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மேற்பார்வை குழுவினர் விசாரணையை தொடங்கியது. அப்போது, 2வது நாளாக கரூர் எஸ்பி ஜோஸ் தங்கையா ஆஜரானார். தொடர்ந்து கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின், குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் தனித்தனியாக நேரில் ஆஜராகி மனுக்கள் அளித்தனர். இதில் அவர்களில் சேலம் ஆத்துரை சேர்ந்த சிவா என்பரும் மனு அளித்தார். அந்த மனுவில், ‘விஜய் கூட்டத்திற்கு தனது குழந்தைகள் அகிலாண்டேஸ்வரி, ஐஸ்வர்யா ஆகிய இருவரை 3 மணிக்கு அழைத்து வந்தேன். இரவாகியும் விஜய் வரவில்லை. மிகவும் தாமதமாக விஜய் வந்தபோது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி தனது 2 குழந்தைகளும் காயமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த துயர சம்பவத்துக்கு முழுக்க முழுக்க விஜய் தான் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்பார்வை குழுவின் தலைவர் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் காலை 11 மணியளவில், 41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்துக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.  அப்போது எஸ்பி ஜோஸ் தங்கையா உடனிருந்தார். தொடர்ந்து பிரசார கூட்டம் நடத்துவதற்காக தவெகவினர் கேட்டு மறுக்கப்பட்ட இடங்களான லைட்ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, மனோகரா கார்னர் ஆகிய 3 இடங்களையும் மேற்பார்வை குழு நேரில் பார்வையிட்டது. பின்னர் பயணியர் மாளிகை வந்த மேற்பார்வை குழுவினர் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்ந்த மனுக்களை பெற்றனர். மாலை 5 மணிவரை மேற்பார்வை குழுவினர் மனுக்கள் பெற்று விசாரணை மேற்கொண்டனர். இதில் நேற்று காலை முதல் மாலை வரை பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என 10 பேர் மேற்பார்வை குழுவினரிடம் மனுக்கள் அளித்தனர்.

Related Stories: