வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்தும், டிட்வா புயலின் தொடர்ச்சியாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வட தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 2ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள்- வட தமிழகம்-புதுச்சேரி-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம்-புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நேற்று வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலை கொண்டு இருந்தது. பின்னர் அது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுக்குறையத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் மாலை வரையில் பெய்த மழையால் எண்ணூர் துறை முகத்தில் அதிகபட்சமாக 146 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாமல்லபுரம் 11 மிமீ, புழல் 52 மிமீ, வில்லிவாக்கம் 44மிமீ, அண்ணாபல்கலைக் கழகம் 9 மிமீ, தரமணி 8மிமீ, கொளப்பாக்கம் 6 மிமீ, பூந்தமல்லி 4மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.

இந்த நிகழ்வின் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் இன்று பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: