துர்க்: சட்டீஸ்கரில் தகாத நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்ட அண்டை வீட்டார் மீது ஆசிட் வீசித் தாக்குதல் நடத்திய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் சித்தார்த் நகர் பகுதியில் வசிக்கும் சில பெண்கள், தங்கள் வீட்டில் இளைஞர்களை வரவழைத்து போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலமுறை எச்சரித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று அண்டை வீட்டார் ஒன்று திரண்டு சென்று, ‘வெளியாட்களை வீட்டிற்கு அழைக்க வேண்டாம், போதைப் பழக்கத்தை நிறுத்துங்கள்’ என்று அந்தப் பெண்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் வீட்டிற்குள் ஓடிச் சென்று ஒருவித திரவத்தை (ஆசிட்) எடுத்து வந்து பொதுமக்கள் மீது வீசியதோடு, கத்தி மற்றும் பிளேடுகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் சோனி குர்ரே என்பவர் கண்ணில் காயமடைந்தது உட்பட பலர் படுகாயமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ‘குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்; கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முழக்கமிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக, தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு மாணவிகள் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
