தடம் மாறி இயக்கப்படும் மினி பஸ் கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம்

கன்னியாகுமரி,டிச.3: கன்னியாகுமரி பழைய பேருந்து ரவுண்டானாவிலிருந்து சன் செட் வியூ பாயிண்ட் பகுதிக்கு மினி பேருந்து அடிக்கடி தடம் மாறி நேரடியாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பாதையில் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருவாய் பெரிதும் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும், அனுமதி இல்லாத வழித்தடத்தில் மினி பஸ் ஓட்டினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி சரியான கண்காணிப்பு இல்லாமல் மினி பஸ்கள் இயக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தியும் கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்கள் சிறிது நேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டரை குழுவாக சந்தித்து புகார் அளிக்க செல்லவுள்ளதாக தெரிவித்து கலைந்து சென்றனர். சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வரும் நிலையில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: