மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை தேமுதிகவினர் செய்ய வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை தேமுதிகவினர் செய்ய வேண்டும் என பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். டிட்வா புயல் வலுவிழந்திருந்தாலும் அதன் தாக்கம் காரணமாக தொடர் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் “டிட்வா” புயல் வலுவிழந்திருந்தாலும் அதன் தாக்கம் காரணமாக தொடர் மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழையால் அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி மக்களை மிகவும் சீரமத்திற்கு உள்ளாகியுள்ளது. குண்டும் குழியுமாக உள்ள பல சாலைகள் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வீடுகளுக்குள் மழை நீர் புகுவதினால் நோய்தொற்று பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் வருவதனால் மக்கள் அச்சதுடன் இருக்கின்றனர்.

இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தொடர் மழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து, அவர்களுக்கு தேவையான உணவு, மாத்திரை மருந்து, உடை போன்ற பாதுகாப்பு வசதிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் வழங்க வேண்டும். எனவே அந்தந்த பகுதியில் இருக்கும் நமது கழக நிர்வாகிகள் நேரடியாக கள ஆய்விற்குச் சென்று “நம்மால் முடிந்த உதவிகளை” மக்களுக்கு செய்து, ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.

சுரங்கப் பாதைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக ராட்சத இயந்திரங்களை கொண்டு அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: