வாஷிங்டன்: உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் மனைவி பெயர் ஷிவோன் ஜிலிஸ். பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிகில் காமத் நடத்திய பிரத்யேக நேர்காணல் நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கலந்து கொண்டு தனது குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்துப் பேசினார். அதன் விவரம் வருமாறு: எனது மனைவி ஷிவோன் ஜிலிஸ் ஒரு பாதி இந்தியர்; சிறுவயதில் தத்தெடுக்கப்பட்டு கனடாவில் வளர்ந்த அவரது தந்தை, ஒரு இந்திய மாணவராக இருந்திருக்கலாம். எனது மகன்களில் ஒருவருக்கு இந்தியப் பெயரைச் சூட்டியுள்ளேன். 1983ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி (தமிழர்) சுப்பிரமணியன் சந்திரசேகரை கவுரவிக்கும் விதமாக, எனது மகனுக்கு ‘சேகர்’ என்று பெயரை சுருக்கி வைத்துள்ளேன்.
அமெரிக்காவின் தொழில்நுட்ப, வர்த்தக வளர்ச்சிக்கு இந்தியப் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர். வெளிநாட்டினர் உள்ளூர் வேலைவாய்ப்பைப் பறிப்பதாகக் கூறுவது தவறு. கடினமான பணிகளைச் செய்யப் போதுமான திறமையாளர்கள் அமெரிக்காவில் இல்லை. திறமையான வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் எச்1பி விசா முறையை ஆதரிக்கிறேன். ஒருசில நிறுவனங்கள் இதைத் தவறாகப் பயன்படுத்தினாலும், இந்த முறையை ரத்து செய்தால் அது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கும். அதேசமயம் சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். திறமையானவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
