நாகர்கோவில், டிச.1: கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 4.11.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 3,02,250, நாகர்கோவில் 2,71,185, குளச்சல் 2,76,754, பத்மநாபபுரம் 2,45,824, விளவங்கோடு 2,42,756, கிள்ளியூர் 2,54,103 என 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 872 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று கணக்கீட்டு படிவம் வழங்கி, திரும்ப பெற்று மின்னணுமயமாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் ஆகியோரின் மேற்பார்வையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 270 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 2 லட்சத்து 54 ஆயிரத்து 103 வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கீட்டு படிவங்கள் வழங்கியும், பூர்த்தி செய்த படிவங்களை திரும்பவும் பெற்றனர். தற்போது மின்னணுமயமாக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
