குன்னூர்,டிச.1: குன்னூர் அருகேயுள்ள லீமா நர்சரி குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான 21வது வார்டு பகுதியில் லீமா நர்சரி குடியிருப்பு பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் கடந்த சில காலமாக கரடி, சிறுத்தை,காட்டுமாடுகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.
இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடைபாதையுடன் கூடிய மழைநீர் செல்ல ஏதுவாக கால்வாயையும் சீரமைத்து, மேற்புறம் மூடி அமைத்து நடைபாதை விரிவுபடுத்தி, தடுப்புச்சுவர் அமைப்பதற்காக ரூ.8 லட்சம் வரை நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அப்பணிகள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.
