தயார் நிலையில் புயல் மீட்பு பணி ஏற்பாடு: ஓரிரு நாட்களில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு: துணை முதல்வர் உதயநிதி தகவல்

சென்னை: சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம், பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையம் ஆகியவற்றில் டிட்வா புயலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நானும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அரசு செயலாளர் கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கால் சென்டருக்கு வருகிற அழைப்புகள், அழைப்புகளின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சமூக வலைதளங்களில் மழை தொடர்பாக தெரிவிக்கப்படுகின்ற புகார்கள், கோரிக்கைகள் குறித்தும் இங்கு ஆய்வு செய்யப்பட்டது.

மீட்பு மற்றும் நிவாரண பணி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்பு படையின் 16 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்களும் கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பெய்த கனமழையால் சுமார் 20,000 ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கிறது. அதிக மழை எதிர்கொண்ட மாவட்டங்களில் 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தற்போது வரை மொத்தம் 1,836 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக 5 கிலோ அரிசி பாக்கெட்டுகள் 5 லட்சம் எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அனைத்து துறையினரும் முறையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் 1913 என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய் நிருவாக ஆணையர் சாய்குமார், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: