டிட்வா புயலால் காற்றின் வேகம், கடல் சீற்றம் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை: ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

சென்னை: டிட்வா புயலால் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் நேற்று அதிகமாக இருந்ததால், மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் சார்வீஸ் சாலைகளும் போலீசார் தடுப்புகள் அமைத்து மூடினர். டிட்வா புயல் காரணமாக தமிழ்நாடு கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. குறிப்பாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் அலைகள் இயல்பை விட இரண்டு மடங்கு உயரத்தில் எழுந்தது. அதேநேரம் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்ததால், பொதுமக்களை கடற்கரை பகுதிக்கு போலீசார் அனுமதிக்கவில்லை.

வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு தங்களது குடும்பத்துடன் வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை அண்ணா சதுக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள சாலைகளில் தடுப்புகள் அனைத்து பாதுகாப்பு கருதி கடற்கரைக்கு செல்ல தடை விதித்தனர். முக்கிய நுழைவாயில்களின் அருகே காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். மேலும், போலீசாரின் தடையை மீறி கடற்கரை பகுதிக்கு சென்ற வாலிபர்களை போலீசார் மற்றும் மெரினா உயிர்காக்கும் படையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் மெரினா, பட்டினப்பாக்கம் பகுதிகளில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லாமல் தங்களது படகுகளை கரையில் நிறுத்திவைத்துள்ளனர். கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் அடிக்கடி கடலோ பகுதியில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

டிட்வா புயல் சென்னைக்கு அருகில் வரும் வேளையில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடற்கரை பகுதியில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருடன் தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories: