×

நடன நிகழ்ச்சியில் கலக்கி வரும் மூத்த நடிகைக்கு இங்கிலாந்து மாஜி பிரதமர் ஆதரவு: கிராம மக்களுடன் சேர்ந்து கொண்டாட்டம்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் பிரபல நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள மூத்த நடிகைக்கு, அவரது அண்டை வீட்டாரான முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங்’ எனும் பிரபல நடன நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் 62 வயதான பிரபல நடிகை அலெக்ஸ் கிங்ஸ்டன் போட்டியாளராகக் கலந்து கொண்டு தனது நடனத் திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தெற்கு ஆக்ஸ்போர்டுஷையர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் அலெக்ஸ் வசித்து வருகிறார். இதே கிராமத்தில்தான் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது குடும்பத்துடன் வசிக்கிறார்.

இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், அலெக்ஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் வாரந்தோறும் ஒன்றாகக் கூடி நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கின்றனர். அலெக்ஸ் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகிய இருவருக்கும் ஹாரிசன் என்ற ஒரே உடற்பயிற்சியாளர்தான் பயிற்சி அளிக்கிறார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறும்போது, ‘அலெக்ஸ் மிகவும் சிறப்பாக ஆடுகிறார். இந்த ஒட்டுமொத்த கிராமமும் அவருக்குத் துணையாக நிற்கிறது’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விலா எலும்பு முறிவு ஏற்பட்டாலும், போட்டியிலிருந்து விலகாமல் அலெக்ஸ் கிங்ஸ்டன் தொடர்ந்து சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : UK ,Majhi PM ,London ,Boris Johnson ,BBC ,
× RELATED பிறப்புரிமை குடியுரிமை ரத்து வழக்கு...