×

பாகிஸ்தான், ஆப்கான் தாலிபன்கள் சீனாவில் அமைதி பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்: எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பாகிஸ்தானும், ஆப்கான் தாலிபன்களும் நேற்று சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தின. முன்பு நட்பு நாடுகளாக இருந்த ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் அண்மை காலமாக மோதலில் ஈடுபட்டுள்ளன. ஆப்கானில் இருந்து செயல்படும் தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான்(டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்புக்கு தாலிபன் அரசு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் தீவிரவாத அமைப்புக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஆப்கான் மறுத்து வருகிறது. இதனை ஏற்று கொள்ளாத பாகிஸ்தான், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்(டிடிபி) அமைப்பை அழிப்பதாக கூறி, ஆப்கான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் பாகிஸ்தானுக்கும், ஆப்கானுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர ஏற்கனவே இருநாடுகளும் நடத்திய பேச்சுவார்ததைகள் தோல்வி அடைந்தன. அதேசமயம், சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை பாதுகாப்பதற்காக இரு நாடுகளுக்கிடையேயான எல்லை மோதல்களை முடிவுக்கு கொண்டு வரவும், நீடித்த போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும் சீனாவும் முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானும், ஆப்கானும் சீனாவில் நேற்று பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கி உள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன. வடக்கு சீனாவில் உள்ள உரும்கி என்ற இடத்தில் இருநாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை சீனாவும், பாகிஸ்தானும் உறுதிப்படுத்தவில்லை.

Tags : Pakistan ,Taliban ,China ,Islamabad ,Afghan Taliban ,Afghanistan ,Tehreek-e-Taliban Pakistan ,TTP ,
× RELATED மாற்று பாதையை தேர்வு செய்த சவுதி...