ஜெருசலேம்: இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமானது இந்தியாவிற்கு முதல் கட்டமாக 2000 இலகுரக இயந்திர துப்பாக்கிகளை வழங்கியது. இஸ்ரேல் நாட்டின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான இஸ்ரேல் வெபன் இன்டஸ்ட்ரீஸ் இந்தியாவுக்கு 41,000 இலகுரக இயந்திர துப்பாக்கிகளை தயாரித்து வழங்குவதற்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதனை தொடர்ந்து இஸ்ரேலின் முன்னணி சிறு ஆயுத உற்பத்தியாளர், தொழில்நுட்பப் பரிமாற்றத்துடன் கூடிய மேன்ட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முதல் தொகுதி இலகுரக இயந்திரத் துப்பாக்கிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
41ஆயிரம் அலகுகளுக்காக பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2000 என்இஜிஇவி 7.62 x 51 எல்எம்ஜிகளின் முதல் தொகுதி கடந்த வார இறுதியில் வழங்கப்பட்டது. மேலும் 4000 துப்பாக்கிகள் இந்த ஆண்டின் பிற்பகுதிகளில் வழங்கப்பட உள்ளதாக இஸ்ரேல் வெபன் இன்டஸ்ட்ரீஸ் சமீபத்திய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விநியோகத்தை இஸ்ரேல் நிறுவனத்துடன் அதானி குழுமத்தின் கூட்டு முயற்சியான பிஎல்ஆர் சிஸ்டம்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. இது இந்தியாவின் சிறு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை தயாரிக்கும் முதல் நிறுவனமாகும். இந்தியாவின் மேன் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ் தொழில்நுட்ப பரிமாற்ற செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
